உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி: 28 ஆயிரம் பேர் சோதனையில் பங்கேற்பு

சென்னை: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்துள்ளது. இந்த பரிசோதனையில் 28 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பல நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த ஜூலை 23ம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.

இதற்காக சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி உட்பட இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் நடத்திய முதல் கட்ட சோதனையில் இந்த தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்களை கடந்து நல்ல உடல்நலத்துடன் இருந்ததால் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு செல்ல தகுதி பெற்றது. இந்த கோவாக்சின் தடுப்பு மருந்தானது முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயது உடைய ஆரோக்கியமான தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி சோதிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சோதனையில் வயது வரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 12 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த 2ம் கட்ட பரிசோதனையில் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர். இதில், யாருக்கும் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 3ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்த 3ம் கட்ட பரிசோதனையில் சுமார் 28 ஆயிரம் பேரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, லக்னோ, பாட்னா உள்ளிட்ட 19 நகரங்களில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது. ஏற்கனவே, ஜைடெஸ் கெடில்லா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 2ம் கட்ட பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர், ஜனவரிக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று பல்வேறு நாடுகள் அறிவித்து பல கட்ட சோதனைகளை நடத்தி வரும்நிலையில், நமது நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்து 3வது கட்ட பரிசோதனை செய்ய இருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: