கோவிட்-19க்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் புறநகர் மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: கோவிட்-19க்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் புறநகர் மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துகளான பேருந்துகள், பயணிகள் ரயில், மின்சார ரயில் சேவைகள் போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பேருந்துகள் மற்றும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘தெற்கு ரயில்வே மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இதேபோல் பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிக்கும் வகையில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசு ஏற்கனவே மின்சார ரயில், நகர்புற ரயில் சேவையினை மீண்டும் துவங்குவதற்கு செப்டம்பர் 2ம் தேதியன்று கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயில் மற்றும் நகர்புற ரயில் சேவை துவங்குவது பொதுமக்களுக்கு பெரிதும் உதவும், வேகமாக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் உதவும்.

எனவே சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சார ரயில் மற்றும் நகர்புற ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் கோவிட்-19க்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்க அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: