சென்னை உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் கூடுதல் கவுன்டர்கள் இல்லாததால் நெரிசலில் சிக்கி தவிக்கும் பயணிகள்: கொரோனா பரவும் அபாயம்

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் கூடுதல் கவுன்டர்கள் இல்லாததால் பாதுகாப்பு சோதனை பிரிவில் சமூக இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்பு கடந்த மே 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்திலும் விமான சேவைகள் படிப்படியாக அதிகரித்து இன்று 172 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடக்கத்தில் பயணிகள் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரை இருந்தது. அப்போது உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதியில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனை பகுதியில் ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே செயல்பட்டது. தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, நாளொன்றுக்கு 17 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அதற்கு பிறகும் பாதுகாப்பு சோதனை பிரிவில் அந்த ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு முன்பு பயணிகள் பாதுகாப்பு சோதனை பிரிவில், போர்டிங் பாஸ்சை காட்டிவிட்டு, செல்போன் கைப்பையை ஸ்கேன் செய்து விட்டு உடனடியாக சென்று விடலாம். ஆனால் தற்போது, பயணி முதலில் தான் அணிந்திருக்கும் மாஸ்க்கை கீழே இறக்கி, தனது முகத்தை காட்ட வேண்டும். அதை, தானியங்கி கேமரா பதிவு செய்யும். இதையடுத்து போர்டிங் பாஸ், புகைப்பட அடையாள அட்டையை கேமராவில் காட்ட வேண்டும். பாதுகாப்பு அதிகாரி கவச கூண்டிற்குள் இருந்து சரிபார்த்து அனுமதிப்பார். அதன்பின்பு செல்போன், கைப்பை ஸ்கேன் செய்யும் இடத்தில், பயணி கனமான ஷூ அணிந்திருந்தால், அதையும் கழற்றி ஸ்கேன் செய்து பரிசோதிக்கின்றனர். இதனால் ஒரு பயணிக்கு 3 முதல் 4 நிமிடங்கள் ஆகிறது.

இதேபோன்று பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடும் மன உளைச்சலுக்குள்ளாகுகின்றனர். சமூக இடைவெளியை மறந்து, ஒருவரோடு ஒருவர் நெருக்கியடித்து கொண்டு நிற்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், நீண்ட வரிசையை தவிர்க்கவும் கூடுதலாக பாதுகாப்பு சோதனை கவுன்டர்களை அமைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பயணிகள் கடும்  அவதிக்குள்ளாகுகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

Related Stories: