சிவகாசி அருகே தடுப்புகள் இல்லாததால் விபத்து அபாயம்

சிவகாசி : சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை சரஸ்வதிபாளையம் அருகே தரைப்பாலம் தடுப்புகளின்றி உள்ளதால் வாகனங்கள் பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சிவகாசி-வெம்பக்கோட்டை மாநில நெடுஞ்சாலை 7 மீட்டர் அகலமுடையது. சங்கரன்கோவில், கழுகுமலை போன்ற ஊர்களுக்கு இந்த சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை தவிர முக்கிய சாலையாக உள்ளதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பட்டாசுஆலை தொழிலாளர்கள் வாகனம் அதிக அளவில் இந்த சாலையில் சென்று வருகிறது.

இதனால் எப்போதும் வாகன பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் சில நாட்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் நடந்தன. சிவகாசி அருகே சரஸ்வதி பாளையம் தட்டாவூரணி ஓடையில் தரைப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படவில்லை. திருப்பத்தில் இந்த பாலம் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் கவனக்குறைவாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி பாலத்திற்குள் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அத்துடன் மாநில நெடுஞ்சாலை துறையினர், எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை. சித்துராஜபுரம், அய்யனார் காலனி, சசி நகர், ராமசாமி நகர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள் சைக்கிள், மற்றும் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இது போன்ற நேரங்களில் ஏதேனும் விபத்து நடந்தால் பெரிய அளவிலான சேதம் ஏற்படும். எனவே, நெடுஞ்சாலை துறையினர் பாலத்தில் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: