இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடம் இருந்து, அதனை மீட்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் பகுதியில் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில், இந்துசமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன், காசி - ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழியாக பக்தர்கள் காசியில் இருந்து ராமேஸ்வரமும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கும் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையொட்டி, இவ்வழியாக செல்லும் பக்தர்கள் பசியாற்றுவதற்காக இக்கோயிலுக்கு சொந்தமான தான சத்திரத்தில் இலவச உணவுகளும் வழங்கப்பட்டன. இரவு நேரங்களில் வரும் பக்தர்கள், சத்திரத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை தங்களது நடைபயணத்தை தொடங்குவார்கள். இதுபோன்ற சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்காக, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், கடந்த 1911ம் ஆண்டுக்கு முன், கோயிலை சுற்றி உள்ள தனது 18.93 ஏக்கர் விளை நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அந்த நிலத்தில் நெல் பயிரிட்டு, அவ்வழியாக செல்லும் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. காலப்போக்கில் வேறொரு பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், மேற்கண்ட வழியாக செல்லும் பக்தர்களின் வருகை குறைந்தது.

இந்த கோயிலும், வெறிச்சோடியது. மேலும், கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களும் பராமரிக்கப்படாமல், அதன் ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிறுகுறு கடைகள் உருவானது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனியார் சிலர், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் தங்களுக்கு சொந்தம் என கூறி ஆக்கிரமித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், கோயிலுக்கு வருமானம் ஏதும் இல்லாததால், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் செய்து, அதன் பின் எந்த ஒரு விழாவும் நடத்தவில்லை. இதனால், தற்போது கோயில் பொலிவிழந்து காணப்படுகிறது.

இதையொட்டி, இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி, பழங்கால கோயில் நிலத்தை மீட்டு, கோயிலை புனரமைத்து தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: