முதல்வரின் உத்தரவை மதிக்காத அதிமுகவினர்: வாடிக்கையானது சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதிமீறல்

பொன்னேரி: முதல்வரின் உத்தரவை மதிக்காமல் நடத்தப்பட்ட அதிமுக நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் ஏராளமானோர் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில்; புதிதாக 3,086 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 80,348 பேர் உள்பட இதுவரை 89,39,331 பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,301 பேர் குணமடைந்ததை அடுத்து கொரோனாவில் இதுவரை கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,50,856-ஆக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 18 பேர் அரசு மருத்துவமனைகளில் 21 என 39 நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து கொரோனா பலி 10,780-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய பாதிப்பை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 845 பேருக்கும், குறைந்தபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் பொன்னேரியில் நடைபெற்ற அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்டனர். பண்டிகை காலத்தை ஒட்டி கடைகளை இரவு 10 மணி வரை திறக்க அனுமதித்து முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். அதில் முக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை அனுசரிப்பது உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் இளைஞர் பாசறை நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரு சிறுணியம் பலராமன், திரு.விஜயகுமார், பரமசிவம் ஆகியோரும் முக்கவசம் அணியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் அதிமுக நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு முறைகள் அலட்சியம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Related Stories: