எழும்பூர் கோர்ட்டுக்கு டெலிபோன் இணைப்பு தந்ததாக 23 லட்சம் சுருட்டிய அதிகாரிகள்: காகிதத்தில் கணக்கு காட்டினர்: பாக்கெட்டில் கரன்சி நிரப்பினர்

சென்னை: எழும்பூர் நீதிமன்றத்துக்கு புதிதாக தொலைப்பேசி மற்றும் லேன் இணைப்புகளை தராமல் 23 லட்சத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் காகித அளவில் செலவு கணக்கு காட்டி சுருட்டி விட்டனர். சென்னை எழும்பூரில் நூற்றாண்டு பழமையான கட்டிடம் மற்றும் பல்வேறு சிறிய கட்டிடங்களில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் நடுவர் நீதிமன்றம், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், இந்த வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து, 2015ல் புதிய நீதிமன்றம் கட்ட  19.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து இக்கட்டிடத்தில் 2018-19ல் தொலைப்பேசி மற்றும் லேன் இணைப்பு செய்ய வேண்டி பொதுப்பணித்துறை ரேடியோ உபகோட்ட பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் எபேக்ஸ் தொலைபேசி மற்றும் லேன் இணைப்பு செய்ய 23 லட்சத்து 700 ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுப்பணித்துறை சார்பில் தொலைபேசி மற்றும் லேன் லைன் இணைப்பு செய்யப்படவில்லை. மாறாக, எழும்பூர் நீதித்துறை மூலம் எல்காட் என்ற நிறுவனம் மூலம் அந்த இணைப்பு தரப்பட்டது. இதற்காக, எழும்பூர் நீதிமன்றம் மூலமாக 23 லட்சத்து 700 மட்டும் அந்த நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரையில் இப்பணிக்காக பெறப்பட்ட நிதியை பொதுப்பணித்துறை ஒப்படைக்கவில்லை. ஆனால், எந்த இணைப்பையும் தராமல் பில் தொகைக்கு டெலிபோன், வயர்கள், பணியாளர்கள் கூலி என்று காகித அளவில் கணக்கு காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, எழும்பூரில் நீதித்துறை தங்கும் விடுதியில் 24 தொலைக்காட்சி பெட்டிகள் வைத்ததில் பெரும் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பில் தினக்கூலி ஊழியர்கள்  நியமனத்தில் 1.20 லட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தொலைபேசி மற்றும் லேன் இணைப்பில் பணம் பெற்றுக்கொண்டு ஸ்வாகா செய்யப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: