தமிழகத்தில் 26 தொழில் திட்டங்கள் மூலம் 25,213 கோடிக்கு தொழில் முதலீடுகள்: முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் அனுமதி

சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில், தமிழகத்தில் 26 தொழில் திட்டங்கள் மூலம் 25,213 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 25,213 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 49,003 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமானது இஎன்இஎஸ் டெக்ஸ் மில்ஸ் (ராம்ராஜ்) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மொபிஸ் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், சீயான் இ-எச்டபிள்யுஏ ஆட்டோமெட்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டம், யுங்சின் இன்டஸ் மதர்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்,  எம்ஆர்எப் லிமிடெட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், ஆத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம், இன்டர்கிரேட்டர் சென்னை பிசினஸ் பார்க் நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் ஆகியவையாகும்.

இத்த திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உள்துறை செயலாளர் பிரபாகர், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழில் துறை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: