மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு மானியத்தில் உரம்: வேளாண்மை துறை தகவல்

சென்னை: மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் அதை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் உரங்களை மானிய விலையில்  தமிழக வேளாண்மை துறை வழங்குகிறது.   மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் பல்வேறு  உதவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, பசுந்தாள் உர விதை விநியோகத்தில் விதை விலையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்த  மானியத்தை சென்னை, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மாவட்டத்தின் பிற மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகளும்  பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று, அனைத்து பயிர்களுக்கான நூண்ணூட்ட கலவை முழு விலையில் விநியோகிக்கப்படுகிறது. நெல் (அடிஉரம்)  கிலோ 41.11, சிறுதானியங்களுக்கு கிலோ 74.91, தென்னைக்கு கிலோ 77.57, பருத்தி (அடிஉரம்) கிலோ 92.95, பயறு வகைகள் கிலோ 100.86, கரும்பு  (அடிஉரம்) கிலோ 48.86, நிலக்கடலை 61.48க்கும் வழங்கப்படுகிறது.

அதேபோன்று, முழு விலையில் உயிர் உரங்களும் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா ஒன்று  6க்கு வழங்கப்படுகிறது. திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா 100 மி.லி 36, 250 மி.லி 85, 500 மி.லி. 150,  1000 மி.லி 280க்கும் வழங்கப்படுகிறது. இவற்றை மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற்றுக் கொள்ளலாம். நீலப் பச்சைப்பாசி கிலோ  ஒன்றுக்கு 2.75 வீதம் வழங்கப்படுகிறது. இதை கோவை, திருப்பூர், கரூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மற்றும் நீலகிரி தவிர்த்து  மற்ற மாவட்ட விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் புளூரோட்டஸ் காளான் மூலம் பண்ணைக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம்  தயாரிப்பதற்காக விவசாயிகளுக்கு 212 மதிப்புள்ள சிறுதளை பைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், 5 கிலோ யூரியா, ஒரு கிலோ  புளூரோட்டஸ் மற்றும் தொழில்நுட்ப துண்டுபிரசுரங்கள் இருக்கும்.

 மண் மாதிரி பரிசோதனைக்கு மண்ணில் உள்ள பேரூட்ட சத்துக்களை பரிசோதனை செய்ய சலுகைக் கட்டணம் மாதிரி ஒன்றுக்கு 10ம், நூண்ணூட்ட  சத்துக்களை பரிசோதனை செய்ய மாதிரி ஒன்றுக்கு 10ம் வசூலிக்கப்படுகிறது. நீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய சலுகை கட்டணமாக மாதிரி  ஒன்றுக்கு ₹20ம் வசூலிக்கப்படுகிறது.  இதுபற்றிய விவரங்களை கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவில் உள்ள வேளாண் அலுவலர்களை தொடர்பு  கொள்ளலாம். இந்த தகவலை தமிழக அரசின் வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

Related Stories: