3 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்தது: பலியாவோர் எண்ணிக்கையும் சரிந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 60,000க்கு கீழ் குறைந்தது. இந்நிலையில், நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில், நாடு முழுவதும் 46,790 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 75 லட்சத்து 97 ஆயிரத்து 63 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 15,197 ஆக உள்ளது.

மொத்தம் 67 லட்சத்து 33 ,328 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 7 லட்சத்து 48,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் 3 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 50,000க்கு கீழ் பதிவாகி உள்ளது. இதற்கு முன், கடந்த ஜூலை 28ம் தேதி 47,703 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகினர். அதன்பிறகு, தற்போதுதான் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை 50,000க்கு கீழ் பதிவாகி உள்ளது. மேலும் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

Related Stories: