கோயில்களில் தரிசன முன்பதிவுக்கான இணையதள சேவை வசதிக்கு கமிஷனர் அனுமதி கட்டாயம்: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை கோயில்களில் தரிசன முன்பதிவுக்கு இணையதள சேவை வசதியை ஏற்படுத்த கமிஷனரின் அனுமதி கட்டாயம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர்  மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: அறநிலையத்துறை இணையதளத்தில் கோயில்களுக்கான வலைதளம் நிக் (NIC) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கோயிலின் தரிசன முன்பதிவு (இலவசம், கட்டணம்), நன்கொடைகள் போன்றவை இணையதள சேவை மூலம் பெற விரும்பும் கோயில்கள் அதற்குரிய முன்மொழிவுகளை இணை ஆணையர் மூலமாக ஆணையர் அனுமதிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.  

ஆணையர் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, கோயில் நிர்வாகம், கோயில்களின் வங்கிக்கணக்கு பராமரிக்கப்பட்டு வரும் வங்கிகளிடம் தொடர்பு கொண்டு வங்கி பரிவர்த்தனைக்காக ஆன்லைன் பேமேண்ட் கேட் வே உருவாக்கி அதன் இணைப்பு விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்கு, தனியாக எவ்வித கட்டணமும் வழங்க வேண்டியதில்லை. இணையதள சேவை வங்கி பரிவர்த்தனை ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கு மற்றும் கோயில் கணக்கினை ஒப்பீடு செய்து சரிதானா என்பதை உறுதி செய்தும், பரிவர்த்தனை தொடர்பாக இடர்பாடுகளுக்கு கோயில் நிர்வாகம் தான் வங்கியுடன் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அந்தெந்த கோயில் நிர்வாகம் தான் முழு பொறுப்பாவார்கள். வங்கியுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்த நகலை ஆணையர் அனுமதி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கி பரிவர்த்தனையில் இடர்பாடுகளுக்கு கோயில் நிர்வாகம் பொறுப்பு: கோயில்களில் இ-பூஜா, இ-உண்டியல், இ-தரிசனம் முன்பதிவு செய்தால் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்பணிகளை தனியார் நிறுவனம் மூலம் செய்து வந்தது. இந்த நிலையில், இ-பூஜா கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து தற்போது அறநிலையத்துறை மூலமே இ-தரிசனம், இ-உண்டியல், இ-பூஜா திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்பேரில், ஒவ்வொரு கோயில்களில் இந்த சேவை தனித்தனியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவையில் வங்கி பரிவர்த்தனையில் இடர்பாடுகளுக்கு கோயில் நிர்வாகம் பொறுப்பு.

Related Stories: