நீட் தேர்வு முடிவில் மதிப்பெண் குளறுபடி :எஸ்டி பிரிவில் அகில இந்திய ‘டாப்பருக்கு’ நேர்ந்த சோகம் :அடுத்தடுத்து தவறு செய்த தேசிய தேர்வு முகமை

ஜெய்ப்பூர், :நீட் தேர்வில் எஸ்டி பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு குறைந்த மதிப்பெண் வெளியிட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வு முகமையின் அடுத்தடுத்த தவறுகளால் மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் கங்காப்பூர் நகரில் வசிக்கும் மிருதுல் ராவத் (17) என்ற மாணவன், கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று தேர்வை எழுதியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட போது, அவர் 720 மதிப்பெண்ணுக்கு 329 மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிர்ச்சியடைந்த மாணவர், ‘ஓஎம்ஆர் சீட் மற்றும் ஆன்ஸர் கீ’ அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் வரவேண்டிய நிலையில், மதிப்பெண் குறைந்துள்ளதால் தேசிய தேர்வு முகமையிடம் முறையிட்டார். அதையடுத்து, மீண்டும் மாணவரின் மதிப்பெண் பட்டியல் பரிசோதிக்கப்பட்டதில் அவர் 720-ல் 650 மதிப்பெண்ணை பெற்றுள்ளது தெரியவந்தது.

தற்போது வெளியிட்ட மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், எஸ்டி பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் மிருதுல் ராவத் ‘டாப்பர்’ என்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து மிருதுல் ராவத் கூறுகையில், ‘நீட் தேர்வு முடிவின்படி மருத்துவக் கல்லூரிகளில் எனக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லை. தேர்வு முடிவு வந்ததும் நான் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தேன். நான் 650 மதிப்பெண்கள் ெபறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் முடிவைப் பார்த்தபோது, ​​என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தும் என் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர்.

அதன் பிறகு தேசிய தேர்வு முகமையிடம் முறைப்படி ‘டுவிட்’ செய்தேன். அதன் பிறகு எனது தேர்வு முடிவுகள் மாற்றப்பட்டன. தேசிய தேர்வு முகமை தனது தவறை ஒப்புக் கொண்டு அதன் திருத்தப்பட்ட மதிப்பெண்ணை வெளியிட்டது. அதனால், நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தோம். பொது பிரிவில் அகில இந்திய தரவரிசை 3577 ஆக எனது மதிப்பெண் உள்ளது. தற்போது வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியலில் 650 என்று எண்ணால் எழுதப்பட்டும், எழுத்தால் முந்நூற்று இருபத்தி ஒன்பது வார்த்தைகளில் எழுதப்பட்டு இருந்தன. மீண்டும் தேசிய தேர்வு முகமையில் முறையிட்டேன். அவர்கள் மீண்டும் ஒரு திருத்தப்பட்ட சான்றை கொடுத்தனர்’ என்றார். தேசிய தேர்வு முகமையின் அடுத்தடுத்த தவறுகளால் மாணவனும், அவரது குடும்பத்தினரும் வருத்தம் அடைந்தனர். இதேபோல், இன்னும் எத்தனை மாணவர்கள் மதிப்பெண் குளறுபடியில் சிக்கியுள்ளனர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Related Stories: