கொரோனா ஊரடங்கு தடையை மீறி மாமல்லபுரம் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: கொரோனா ஊரடங்கு தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கடலில் குளித்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்து விட்டு கடலில் குளிப்பது வழக்கம். மேலும் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களாக பூட்டு போட்டு பார்வையாளர்கள் கண்டு களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து கட்டணம் இல்லாத அர்ச்சுணன் தபசை கண்டு ரசித்து அவற்றின் முன் நின்று குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கடல் மட்டம் சற்று உயர்ந்தும், கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடலில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தடையை மீறி கடலில் குளித்து வருகின்றனர். கடலில் குளிக்க தடை இருந்தும் பெரியவர்கள் கடலில் இறங்குவதால் சிறுவர்களும் பயமின்றி இறங்கிக் குளிக்கின்றனர். மேலும் கடலில் குளிக்கக் கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவற்கு முன் போலீசார் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: