விவசாய நிலங்களில் மின்கம்பம் நடும் அதிகாரம்: 135 ஆண்டு சட்டத்தை ரத்து கோரி வழக்கு: ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

சென்னை: விவசாய நிலங்களில் நில உரிமையாளர்களின் அனுமதி பெறாமல் மின் கம்பங்களை நட அதிகாரம் அளிக்கும் 135 ஆண்டுகள் பழமையான சட்ட பிரிவுகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயந்தி, முண்டுவேலம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி உள்ளிட்ட 11 விவசாயிகள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் நெலாலி கிராமத்திலிருந்து ராசிப்பாளயம் வரை உயர் மின் அழுத்த மின் இணைப்பு தரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்திற்காக எங்கள் விவசாய நிலங்களில் மின் கம்பங்களை எங்களிடம் கருத்தும், அனுமதியும் கேட்காமல் அதிகாரிகள் நடுகிறார்கள்.

இதற்காக1885ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட டெலகிராப் சட்டத்தின்கீழ் நில உரிமையாளர்களை கேட்காமல் நிலத்தை அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துள்ளனர். அந்த சட்டத்தின் பிரிவுகளை இணைத்து தமிழக அரசு 2003ல் மின்சார சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி எங்கள் நிலத்தில் எங்கள் அனுமதி பெறாமல் மின்கம்பங்களை நட அரசு முடிவு செய்துள்ளது.   எனவே, அரசியமைப்புக்கு முரணான 135 ஆண்டு பழமையான இந்திய டெலகிராப் சட்டப் பிரிவுகள் 10 மற்றும் 16ஐ ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் லட்சுமி நாராயணன், கணேஷ்பாபு ஆகியோர் ஆஜராகினர். லட்சுமி நாராயணன் வாதிடும்போது டெலகிராப் இணைப்புக்கான கம்பங்களை நடும்போது பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்படுவதில்லை. ஆனால், மின் வழித்தடத்தால் கதிர்வீச்சு அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மின் கம்பங்கள் நிரந்தரமாக நடப்படுவதால் மனுதாரர்களின் விவசாயம் முழுவதும் பாதிக்கப்படும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, இதேபோன்று பல வழக்குகள் மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் நடுதலை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: