மாலத்தீவு, மொரீசியஸ் நாடுகளில் ஓபிஎஸ் மகன் பயணம்: ரவீந்திரநாத் தனி விமானத்தில் அனுமதி இல்லாமல் வெளிநாடு சென்றது எப்படி? விசாரணை நடத்த மத்திய அரசு திடீர் உத்தரவு

சென்னை:  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தனி விமானத்தில் வெளிநாடு பயணம் சென்றது சர்ச்சைக்குள்ளாகியதை தொடர்ந்து, மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் இருவரிடம் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

அதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டது. இதில் எடப்பாடி ஆதரவாளர்கள் 6 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும் இடம் பெற்றனர். இதையடுத்து அதிமுக கோஷ்டி மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனும் அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத்குமார் கடந்த வாரம் தனி விமானத்தில் மாலத்தீவு சென்றார். பின்னர் அங்கிருந்து மொரீசியஸ் சென்றார். அவருடன் 4 நண்பர்களும் உடன் சென்றனர். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் மொத்தமாக முடங்கியுள்ளதால் மக்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமலும், அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்பி, தனி விமானத்தில் நண்பர்களுடன் உல்லாச சுற்றுலா சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வழக்கமாக மொரீசியஸ் தீவில் இந்திய மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல தொழில் அதிபர்கள், அமைச்சர்கள் அவர்களது வாரிசுகள் தங்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத்குமாரும் மொரீசியஸ் சென்று வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை பதுக்கி வைக்க அங்கு சென்றாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ரவீந்திரநாத்குமார் எம்பி மத்திய அரசின் அனுமதியில்லாமல் தனி விமானத்தில் வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அவர் சென்ற தனி விமானம் மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாட்டில் தரை இறங்குவதற்கு மட்டும் விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியுள்ளதாகவும், அதே நேரம் தனி விமானத்தில் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு மத்திய அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

Related Stories: