ஆவடி சி.டி.எச் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி: ஆவடி சி.டி.எச் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக சி.டி.எச் சாலை செல்கிறது. இதன் வழியாக  தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், அனைத்து தரப்பு மக்களும் சாலைகளை பயன்படுத்தி தங்களது பணிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், பல இடங்களில் மாடுகள் குறுக்கும், நெடுக்குமாக நடமாடுகின்றன. இவைகள் பல நேரங்களில் சாலையின் முக்கிய பகுதிகளில் படுத்து தூங்குகின்றன.

இதனால் காலை, மாலை வேளையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், “ஆவடி பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் குறுக்கே செல்லும் மாடுகள் மீது இரு சக்கர வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், நெமிலிச்சேரி, நடுக்குத்தகை  ஆகிய இடங்களில் உள்ள சாலையில்  மாடுகள் அதிக அளவில்  நடமாட்டம் உள்ளது.    மேற்கண்ட பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், மாடுகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

சாலையில் தீடீரென்று குறுக்கிடும் மாடுகள் மீது மோதி கார்கள் சேதம் அடைக்கின்றன. மேலும், மாடுகள் மீதி மோதாமல் இருக்க தீடீரென்று பிரேக் போடும்போது பல  இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைக்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல் பல வாகன ஓட்டிகளும், உடன் செல்லுபவர்களும் உயிர் பலியாகுகின்றனர். வீட்டில் இருந்து மாடுகளை உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுகின்றனர். பின்னர்,  அவர்கள் அவைகளை பற்றி கண்டு கொள்ளுவதில்லை. இதன் பிறகு மாடுகள் முக்கிய வீதிகள், நெடுஞ்சாலைகளில் இஷ்டம்போல் சுற்றி திரிகின்றன.

சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது மாடுகள் முட்டி மோதுகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அச்சத்துடன் தான் சாலையில் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை” என்றனர்.

Related Stories: