மீஞ்சூர் பேரூராட்சிக்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி: மீஞ்சூரில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டை தவிர்க்க துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர். பொன்னேரி வட்டம் மீஞ்சூர் பேரூராட்சி எல்லைக்குள் 19 ஆயிரம் குடியிருப்புகள், வங்கிகள், 1,500 வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மீஞ்சூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சார இணைப்பைப்பெற்று, பயன்படுத்துகின்றனர். மீஞ்சூரில் இருந்து 3 கி.மீ. தூரமுள்ள மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலூர், துணை மின் நிலையத்தில் இருந்து மீஞ்சூர் நகருக்கு சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்படாததால் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஏற்படும் மின் தடையால், குழந்தைகள், முதியவர்கள், பெரிதும் அவதிப்படுகின்றனர். அதிக குடியிருப்புகள் உள்ள மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைத்து சீரான மின் விநியோகம் செய்ய அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் விடுத்த கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

இதனிடையே,  அரசு நிதி ஒதுக்கியுள்ளபோதும், மீஞ்சூர் பேரூராட்சி எல்லைக்குள் துணை மின்நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  மேலும் தற்போது இயங்கும் மீஞ்சூர் நகர மின்வாரிய அலுவலகம் வாடகை கட்டிடத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் உள்ளேயும் பல இடங்களில் நீர் கசிவும் சிமிண்ட் பூச்சுகள் விழுந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.

தற்சமயம் இந்த அலுவலகத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மின் கட்டணம் செலுத்த இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அலுவலகம் இருப்பதால் உடனடியாக மாற்று இடத்தில் குறிப்பாக அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய மின்வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். எனவே துணை மின் நிலையம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: