லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றல்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த  அத்திப்பட்டு காமராஜர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து செட்டிநாடு நிலக்கரி கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களுக்கும் லாரிகள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் அத்திப்பட்டு, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் பணி  செய்கின்றனர்.

இந்நிலையில், நேற்று லாரி உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் டீசல், சுங்க கட்டண உயர்வு, ஓட்டுநர்கள் கிடைக்காமை, வாகனங்களின் உதிரிபாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் லாரி தொழில் முற்றிலும் நலிந்து வருகிறது.

மேலும் உள்ளூர் லாரிகளுக்கு லோடு கொடுப்பதில் பல்வேறு தடைகள் இருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நலிந்து வரும் லாரி தொழிலையும் இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான லாரி தொழிலாளர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளாக லோகநாதன், சுதாகர், ராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தின் முடிவில் சங்க பொருளாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

Related Stories: