ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு ஜவுளிக்கடை, உணவகங்களில் குவிந்த மக்கள் கூட்டம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: உலகையே உலுக்கிய கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியதும் மத்திய,மாநில அரசுகளால் மார்ச் மாதம் இறுதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ச்சியான பொதுமுடக்கத்தால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியது. வியாபாரிகள் வாழ்வாதாரம் இன்றித் தவித்தனர். இதனால் கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் பொலிவிழந்து காணப்பட்டது. பட்டு நெசவுக்கு உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி வியாபாரிகள், நெசவுத்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். 6 மாதங்களுக்கும் மேலாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், கோயில் உற்சவங்கள் நடைபெறவில்லை.

மேலும் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அமலில் இருந்தாலும் புரட்டாசி மாதம் என்பதால் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்து வந்தனர். இதனால் ஜவுளிக்கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் முடிவடைந்து நேற்று ஐப்பசி மாதம் தொடங்கியது. இதனால் ஐப்பசி மாதம் தொடங்கிய முதல் நாளே முகூர்த்த நாள் என்பதால் காஞ்சிபுரத்தில் பெரும்பாலான திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிக்காக பொதுமக்கள் குவிந்தனர்.

மேலும் பட்டுச் சேலை எடுக்க, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் குவிந்ததால் ஜவுளிக்கடைகள் நிறைந்த காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தளர்வுகள் இருந்தாலும் கடந்த 208 நாட்களாக பொதுமக்கள் வருகைக் குறைவால் வருமானம் இன்றி தவித்த வியாபாரிகள் நேற்று நடைபெற்ற வியாபாரத்தால் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Related Stories: