பணம் கேட்டதில் தகராறு நண்பரின் தம்பி தள்ளிவிட்டதில் வாலிபர் பலி

திருப்போரூர்:  பணம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் நண்பரின் தம்பி, வாலிபரை பிடித்து தள்ளியதில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார். திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள மேல்கல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவா (25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மகன் தினேஷ்குமார் (24) என்பவரும் நண்பர்கள். கடந்த  2 மாதங்களுக்கு முன்பு தேவாவிற்கு சொந்தமான காரை தினேஷ்குமார் எடுத்துச் சென்றார். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தது. இதையடுத்து கார் விபத்தில் சிக்கியதற்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் விடுவதாக தினேஷ்குமாரும், அவரது பெற்றோர்களும் தேவாவிடம் கூறி இருந்தனர்.

2 மாதங்களாகியும் பணத்தைக் கொடுக்காததால் கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தேவா, தினேஷ் குமாரின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரிடம் கார் பழுது பார்க்க ஏற்பட்ட செலவுத் தொகையை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது தினேஷ்குமாரின் தம்பி மோகன்ராஜ் (21) என்பவர் எதுவாக இருந்தாலும் என் அண்ணனிடம் பேசிக்கொள், என் தாயாரை அவதூறாக பேசக்கூடாது என்று கூறி உள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இதில் தேவாவை மோகன்ராஜ் தள்ளி விட்டதில் தலையில் காயம் ஏற்பட்டு தேவா மயங்கிச் சரிந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தேவாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தேவா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலறிந்ததும் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்தில் தேவாவை தள்ளி விட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர்.

Related Stories: