உறவினர்களால் கைவிடப்பட்டு பாலத்துக்கு அடியில் வீசப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

* மேலும் 2 பேர் மீட்பு

* சுகாதாரத்துறை செயலாளர் நடவடிக்கை

சென்னை:  தினகரன் செய்தி எதிரொலியாக உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மேம்பாலத்திற்கு கீழ் ஆதரவற்ற  முதியவர்  ஒருவரை அவருடைய உறவினர்கள் மேம்பாலத்திற்கு கீழ் போட்டு விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அவர் படுத்த படுக்கையாக  கிடந்த அவர் மீது பிளிச்சீங் பவுடரும் தூவப்பட்டிருந்தது. மேலும் பசிக்குது பிஸ்கட் வாங்கி கொடுங்க என்று கேட்கும் அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவரது நிலைமை காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.

மேலும் மனிதாபிமானம் எங்கே செல்கிறது என்று தினகரனின் நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளிவந்தது. இச்செய்தியை பார்த்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனடியாக அந்த முதியவரை மீட்டு மருத்துவ உதவி அளிக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி  சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகம் சார்பில்  ராயப்பேட்டை மேம்பாலத்திற்கு கீழ் இருந்த ஆறுமுகம் (70). என்பவரை உடனடியாக மருத்துவர்கள் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதில் அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று இல்லை என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினர் மூலம் அவரது உறவினர்களை கண்டுபிடித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனை தொடர்ந்து அவரை முதியோர் இல்லங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல ராயப்பேட்டை பாலம் அருகில் கேட்பாரற்று இருந்த 2 முதியவர்கள் மீட்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஒருவர் பெயர் ராஜேந்திரன்(54) விருதுநகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர்.ஆனந்திடம் கேட்ட போது: அந்த முதியவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுயநினைவுடன் இருக்கிறார், தற்போது உணவு உட்கொள்கிறார். மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: