கூவம், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசித்த 17 ஆயிரம் குடும்பங்கள் மறு குடியமர்வு: பருவமழை முன்னெச்சரிக்கை பணியில் மாநகராட்சி தீவிரம்

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூவம், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசித்த 17 ஆயிரம் குடும்பங்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 1,894 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் உள்ளன. இதைத்தவிர்த்து 30 கல்வாய்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு இந்த கால்வாய்கள் அனைத்து தூர்வாரப்படும். அதன்படி இந்தாண்டு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கூவம் மற்றும் அடையாறு கால்வாய்களின் ஓரம் வசித்த 17 ஆயிரம் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கால்வாய்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1262 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 820 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவீன இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

4 ரோபாட்டிக் மண்தோண்டும் கருவிகள், நீரிலும் நிலத்திலும் இயங்கும் 2 ஆம்பிவியன் இயந்திரங்கள், ரீசைக்லர் மற்றும் சக்‌ஷம் கம் ஜெட்டிங் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ் சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளை புணரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 133 நீர்நிலைகளுக்கான புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. 50 நீர்நிலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 27 நீர்நிலைகளின் பணிகள் மேற்கொள்வதற்கான நிதியை பெறும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் கூவம், அடையாறு கரைகளில் வசித்த 26 ஆயிரம் குடும்பங்கள் மறு குடியமர்வு செய்ய வேண்டும் என்று கண்டறியப்பட்டது. தற்போது வரை 17 ஆயிரத்து 768 குடும்பங்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளன. மீதம் 9,069 குடும்பங்கள் மறு குடியமர்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: