நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தப்பிய 10 மாணவர்களை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசுக்கு ஆதார் கைவிரிப்பு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாக  குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் புகைப்படங்களை வைத்து அவர்களின் தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிபிசிஐடிக்கு ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வின்போது பலர் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராயபுரத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித்சூர்யா மற்றும் எம்பிபிஎஸ் படித்து வந்த 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் இடைத் தரகர் ஒருவர் என 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிைலயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாகவும், தேடப்படும் குற்றவாளிகளாக சிபிசிஐடி போலீசார் 2 பெண்கள் உட்பட 10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டது. அவர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தால் தகவல் அளிக்கும் நபர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. அவர்களின் பெயர், முகவரி குறித்து விவரம் தெரிந்தால் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது. ஆனாலும்ஆள்மாறாட்டம் வழக்கில் தேடப்படும் 10 பேர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாமல் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 மாணவர்களின் புகைப்படங்களை ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி அனுப்பி அவர்களின் விபரங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக ஆதார் ஆணையத்திற்கும் சிபிசிஐடி முறைப்படி 10 மாணவர்களின் புகைப்படங்களுடன் கடிதம் எழுதி இருந்தது. அதன்படி ஆதார் ஆணையம் தமிழக சிபிசிஐடி போலீசார் அனுப்பிய 10 மாணவர்களின் புகைப்படங்களை வைத்து ஆதார் ஆணையத்திடம் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடைபெற்றது. நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த பணியில் சிபிசிஐடி போலீசார் அனுப்பிய 10 மாணவர்களின் புகைப்படங்கள் ஆதார் ஆணையத்திடம் உள்ள புகைப்படங்களுடன் ஒன்று சேரவில்லை.

அதைதொடர்ந்து ஆதார் ஆணையம் தமிழக சிபிசிஐடிக்கு 10 மாணவர்களின் தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று முறைப்படி தகவல் அளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய 10 மாணவர்களின் புகைப்படங்கள் இருந்தும் அவர்களை இரண்டு ஆண்டுகளாக சிபிசிஐடியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 10 மாணவர்களின் விபரங்கள் பெற்று கைது செய்வது குறித்து உயர் சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு ஆரம்ப நிலையிலேயே இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: