சிறப்பு அந்தஸ்தால் கிடைக்கும் நன்மையை விட இடஒதுக்கீடு முக்கியம்: அருள் அறம், தலைவர், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

நிர்வாக சிக்கலினால் அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்கிறோம் என்கிறார்கள். ஆசிரியர்களுடனான கலந்தாய்வே இல்லாமல் ஒரு பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது எந்த வகையில் சாத்தியமாகும். இது, உலகத்தில் எங்கும் நடக்காத ஒரு நடைமுறை. அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து நாங்கள் வளர்த்து வைத்த புகழையும், பெயரையும் மற்றவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

தற்போது நாம் யுஜிசியிடம் நிதி வாங்கி வருகிறோம். சிறப்பு அந்தஸ்து பெறும் போது இடஒதுக்கீடு நடைமுறை அடிபட்டுவிடும். இதை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் போது எங்களுக்கு இட

ஒதுக்கீடு வேண்டும் என்று மாநில அரசு கறாராக எடுத்துக்கூற வேண்டும். இதை எந்த ஒரு அரசியல் சட்டமும் மாற்றிவிட முடியாது. 69 சதவீத ஒதுக்கீட்டை பாதுகாப்பதே நமது கடமை. அந்த காலத்தில் அரசாங்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதை பேணி வளர்த்தார்கள். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் போது அது கல்வியை அழிக்கும் செயலாகவே மாறிவிடும்.

தலைசிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிடும். உயர்கல்வி, தொழில்நுட்ப கல்விக்கு செய்யும் துரோகமாகவே இது இருக்கும். சிறப்பு அந்தஸ்து பெறும் பட்சத்தில் ஆசிரியர்களும் சக்திக்கு மீறி கடுமையாக பணி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதேபோல், அண்ணாப் பல்கலைக்கழகம்  தரத்தில் மட்டுமே உயர்த்தப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய சம்பளம் பழைய நிலையில் தான் இருக்கும். பண நோக்கத்துடனோ, செல்வாக்கு நோக்கத்துடனோ ஆசிரியர்கள் இந்த விவகாரத்தை அணுகவில்லை.

சிறப்பு அந்தஸ்து நமக்கு நன்மை பயக்கும் என துணைவேந்தர் நினைக்கிறார். ஆனால், சிறப்பு அந்தஸ்து கொடுத்துவிட்டு நீங்களே பணத்தை திரட்டுங்கள் என்று கூறினால் அது ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும். 550 இன்ஜினியரிங் கல்லூரிகளாக விரிவுபடுத்தி உலகத்திற்கு தேவையான பொறியாளர்களை நாம் கொடுத்துள்ளோம். வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களில் 95 சதவீதம் பேர் இந்த கல்லூரிகளில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்து கிடைக்கும் சிறப்பு அந்தஸ்து எங்களுக்கு தேவையில்லை. மற்ற நாட்டு மாணவர்கள் இங்கு வந்து படிக்கும் அளவிற்கு நமது தரத்தை உயர்த்த வேண்டும்.

எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டை தக்க வைப்பது என்பது அரசாங்கத்தின் வேலை. மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறும் தமிழக அரசு இடஒதுக்கீட்டை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு பக்கம் உயர் சிறப்பு அந்தஸ்தின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் நாம் இடஒதுக்கீட்டை தக்க வைப்பதையே குறிக்கோளாக கொள்ள வேண்டும். இல்லை என்றால் பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏற்கனவே, இடஒதுக்கீடு இல்லாத சிறப்பு அந்தஸ்து பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் திறமையான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்கிறார்கள்.

69 சதவீத இடஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் அது மாணவர்களுக்கு மட்டும் இல்லை ஆசிரியர்களுக்கும் பெரிய பிரச்னையாக இருக்கும். இட ஒதுக்கீட்டை பாதுகாத்தால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. எனவே, அரசாங்கம் இதில் முழுமையாக கவனம் செலுத்தி இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். இடஒதுக்கீட்டை தக்க வைப்பதையே குறிக்கோளாக கொள்ள வேண்டும். இல்லை என்றால் பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். சிறப்பு அந்தஸ்து பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் திறமையான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்கிறார்கள்.

Related Stories: