பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழைபெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வெள்ள அபாய அளவை எட்டின. சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைகளும் வெள்ள அபாய அளவை கடந்தன. இதில் பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகள் நிரம்பின.

பெருஞ்சாணி அணை உச்சநீர்மட்டத்தை எட்டியதன் காரணமாக அணையில் இருந்து மறுகால் வழியாக முதலில் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமும், தொடர்ந்து 2 ஆயிரத்து 500 கன அடி வீதமும் தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக பாயத்தொடங்கியுள்ளது. நேற்றும் காலை முதல் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அத்துடன் பெருஞ்சாணி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பரளி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவட்டாறு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காப்பட்டணம் கடலில் சென்று கலக்கிறது. இதனால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை வரை ஒரு சில இடங்களில் மட்டுமே சாரல் மழை பெய்திருந்த நிலையில் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு வருகின்ற தண்ணீரின் அளவும் குறையத்தொடங்கியுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.05 அடியாக இருந்தது. அணைக்கு 1550 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நேற்று மாலை வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர், திற்பரப்பு அருவி, மூவாற்று முகம் வழியாக தாமிரபரணியை அடைந்தது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மாலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 1667 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 45.20 அடியாக இருந்தது.

77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.05 அடியாகும். அணைக்கு 1720 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 3061 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றார்-1ல் 14.43 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 154 கன அடி தண்ணீர் வரத்து காணப்படுகிறது. 18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றார்-2ல் 14.52 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

42.65 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பொய்கையில் 17.30 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 18 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 54.12 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 34 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 34 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையில் நீர்மட்டம் 24.1 அடியாக உள்ளது. அணைக்கு 7 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 7.42 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

Related Stories: