யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை சவரனுக்கு 1,464 சரிவு: விசேஷ நேரத்தில் விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சவரனுக்கு 1,464 குறைந்தது. விசேஷ நேரத்தில் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி தங்கம் விலை சவரன் 43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. கடந்த 15ம் தேதி (வியாழக்கிழமை) ஒரு கிராம் தங்கம் 4,830க்கும், சவரன் 38,640க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ₹23 அதிகரித்து ஒரு கிராம் 4,853க்கும், சவரனுக்கு 184 அதிகரித்து ஒரு சவரன் 38,824க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயர்ந்தது.

அதாவது வியாழக்கிழமை விலையை விட கிராமுக்கு 33 அதிகரித்து ஒரு கிராம் 4,863க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் 38,904க்கும் விற்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 183 குறைந்து ஒரு கிராம் 4,680க்கும், சவரனுக்கு 1464 குறைந்து ஒரு சவரன் 37,440க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தங்கம் விலை அதிரடியாக குறைந்தது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு தங்கம் விலை சவரன் 38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் தீபாவளி உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை குறைந்துள்ளது மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என்பது தெரிய வரும். இதுகுறித்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கருத்து கணிப்பு நிலவி வருகிறது.

இதனால் அங்கிருக்கக்கூடிய பொருளாதார கொள்கையில் பெருமளவு மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால் உலகச்சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை குறைந்துள்ளது. ஏற்கனவே சவரன் 40 ஆயிரம், 42 ஆயிரம், 43 ஆயிரம் என்று கடந்து வந்தது. தற்போது ஏறக்குறைய 4000 முதல் 5000 வரை குறைந்துள்ளது. இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றார்.

Related Stories: