சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஏலகிரியில் 650 ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்த மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி: விஜிலென்ஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

வேலூர்: லஞ்ச வழக்கில் சிக்கிய வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாடு வாரிய முதன்மை பொறியாளர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் 650 ஏக்கருக்கு மேல் நிலங்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாடு வாரிய முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வத்தின் ராணிப்பேட்டை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கப்பணம், 3.6 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் மேலும் கைப்பற்றப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் தொடர்பாக போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. அதோடு அவரது டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை நடந்து வரும் நிலையில், பன்னீர்செல்வம் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் நிதி நிறுவன அதிபராகவே வலம் வந்துள்ளார். அதன் அலுவலகமாக வீட்டையே பயன்படுத்தி வந்துள்ளார். தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கியுள்ளார். கடன் கொடுக்கல் வாங்கல் பணிகளுக்கு தனது துறையை சேர்ந்த ஓய்வு பெற்றவர்களையே நியமித்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு கடனாக அவர் வெளியில் வழங்கியுள்ள லஞ்சப்பணம் எவ்வளவு என்பது குறித்து விவரம் திரட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் பன்னீர்செல்வம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஏலகிரி ஆகிய இடங்களில் 650 ஏக்கருக்கும் மேல் நிலங்களை வாங்கி குவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் பணியாற்றி வரும் 21 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் துறையின் உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் ஒரு அரசு அதிகாரியிடம் இவ்வளவு பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது இதுதான் முதன்முறை. அவரது நடவடிக்கையால் துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவரால் பலனடைந்த தொழிலதிபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விஜிலென்ஸ் போலீசாரின் விசாரணை நடந்து வருவதால் மேலும் எதுவும் சொல்வதற்கில்லை’ என்றனர். இதற்கிடையில் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட தோல், ரசாயனம் உட்பட சுற்றுச்சூழலுடன் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு பிடியும் இறுகியுள்ளது. இதனால் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த தொழில் நிறுவனங்களின் அதிபர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: