கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை வகுக்க நிபுணர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3 மருந்துகள் தயார்நிலையில் உள்ளதாக அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து வகுக்குமாறு நிபுணர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதே சமயம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 கொரோனா மருந்துகளின் ஆய்வுகள் முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், ஒரு மருந்தின் பரிசோதனை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர தடுப்பூசி கண்டுபிடிப்பதே ஒரே தீர்வு என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இதனால், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனை முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தின் ‘கோவிஷீல்டு’, ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பு மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன. ரஷ்யா தனது மருந்தின் பரிசோதனையை முழுமையாக முடித்து விட்டதாக கூறி வருகிறது. ஆனால், உலக சுகாதார அமைப்பும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் அதை ஏற்க மறுத்து வருகின்றன. அதே நேரம், இந்தியாவில் 3 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பரிசோதனைகள் முழு வீச்சில் நடந்து வருவதாக சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மருந்துகள் தற்போது இறுதிக்கட்ட பரிசோதனைகளை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், அவற்றின் முழு விபரத்தை மத்திய அரசு வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் செய்து வருகிறது. இதற்கான திட்டங்களை வகுக்க, தேசிய நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தொற்று சூழல், தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், அவற்றின் விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிரதமரின் தலைமை செயலாளர், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர், முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பரப்பளவை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகளை கொண்டு செல்லுதல், வழங்குதல் மற்றும் நிர்வகித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாக திட்டமிடப்பட வேண்டும். குளிர் சேமிப்பு வசதிகள், விநியோக இணைப்புகள், கண்காணிப்பு முறை, முன்னோக்கிய மதிப்பீடு மற்றும் மருந்து குப்பிகள், சிரிஞ்ச்கள் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து துணை கருவிகளையும் தயார் செய்தல் மற்றும் ஆகியவற்றுக்கான திட்டமிடலை முன்கூட்டியே முடிக்க வேண்டும்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் பேரழிவு மேலாண்மை திட்டம், தேர்தல் நடத்துதல் போன்ற நமது அனுபவங்களை தடுப்பு மருந்து விநியோகத்தில் உபயோகிக்க வேண்டும். இதில், தேவையான அமைப்புகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது சமூக அமைப்புகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில அளவிலான நிர்வாகிகள் ஆகியோரை ஈடுபடுத்த வேண்டும். ஒட்டு மொத்த செயல்பாடுகளும் வலுவான தகவல் தொழில்நுட்ப பின்னணியில் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளது. அதில் 2 மருந்துகள் 2ம் கட்டத்திலும், ஒரு மருந்து இறுதிக்கட்டமான 3வது கட்டத்திலும் உள்ளது. இந்த மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியை வலுப்படுத்த, இந்திய விஞ்ஞானிகளும், ஆய்வு குழுவினரும் ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கையுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

வங்கதேசம், மியான்மர், கத்தார் மற்றும் பூடான் ஆகியவையும், மருந்துகளை பரிசோதிக்கும் திட்டத்தை தங்கள் நாடுகளில் அமல்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுபோல், தடுப்பு மருந்துகளை வழங்குவதை அண்டை நாடுகளோடு சுருக்கிக் கொள்ளாமல் உலகம் முழுவதற்கும் வழங்க வேண்டும். மேலும், மருந்துகளை விநியோகிக்கும் திட்டங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி நிர்வகித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர் குழு அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து தடுப்பூசி சேமிப்பு, வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் குறித்து விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* எச்சரிக்கையாக இருக்கணும்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் நோய் தொற்றின் வளர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சியை பார்த்து திருப்தி அடைந்து விடக்கூடாது என்றும், தொடர்ந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். குறிப்பாக வருகிற பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: