பரமக்குடியில் சாலையோரம் மாத்திரை குவியல்: வீசி சென்றது யார்?

பரமக்குடி: பரமக்குடி நான்குவழி சாலை ஓரங்களில் அரசு மருத்துவமனை மாத்திரைகள் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் நான்குவழி சாலையோரம் தமிழக அரசால் வழங்கக்கூடிய மாத்திரைகள் சிதறி கிடப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போது அரசு சார்பில் வழங்கப்படும் காய்ச்சல், சளி, இருமல் உள்பட பல்வேறு நோய்க்கான 1000க்கும் மேற்பட்ட மாத்திரை அட்டைகள்  கேட்பாரற்று சாலையோரங்களில் சிதறி கிடந்தன. இதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

சாலைகளில் சுற்றித் திரியும் மனநோயாளிகள் அல்லது கால்நடைகள் இதை  தின்றால் விபரீதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரியனேந்தல் முதியவர் ஒருவர் கூறுகையில், “தமிழக சுகாதாரத் துறைக்கு வரும் மாத்திரைகளை முறையாக நோயாளிகளுக்கு வழங்காததால் காலாவதியான மாத்திரைகளை சாலையோரத்தில் வீசுகின்றனர். முறையாக தீ வைத்தும், குழியில் போட்டும் மூடாமல் வீசுவதால்  பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரை அட்டைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: