நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கோரி நடிகர் சூரி மனு: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நில மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் ஏடிஜிபி மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி நகைச்சுவை நடிகர் சூரி தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை அறிக்கை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரம் மூலம் சினிமாவில் பிரபலமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருபவர் சூரி. இவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகன் என்ற படத்தில் இணைந்து நடித்தார். அதன் பிறகு விஷ்ணுவின் தந்தையான முன்னாள் ஏடிஜிபி ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர், சென்னை சிறுசேரியில் ரூ.3.10 கோடி மதிப்பில் நிலத்தை சூரியிடம் விற்றுள்ளனர். அதற்கு பிறகுதான், நிலத்தில் பல வில்லங்கம் இருப்பது சூரிக்கு தெரிந்தது.

 இதனையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து ரமேஷ் குடவாலாவிடம் முறையிட்டுள்ளார். நிலத்தை திருப்பி எடுத்துக்கொள்வதாக கூறி மொத்த பணத்தில் ரூ.40 லட்சத்தை சூரியிடம் ரமேஷ் குடவாலா கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.2.70 கோடியை பல மாதமாக திருப்பி வழங்காமல் ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஏடிஜிபி ரமேஷ் குடவாலா ஓய்வு பெற்றார்.இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்தார். ரமேஷ் குட்வாலா, அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நடிகர் சூரி புகார் அளித்தார். ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி இருப்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் சூரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ‘‘என்னை மோசடி செய்த வழக்கில் முன்னாள் ஏடிஜிபி சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த விசாரணையை, தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது, சிபிஐக்கு மாற்ற வேண்டும்’’ என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மனுதாரரின் புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார். மனுதாரர் தரப்பில், ‘மத்திய குற்றப்பிரிவும் தமிழக காவல்துறைதான் என்பதனால் இதை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுவரை நடந்த விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: