மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்நவராத்திரி விழா கோலாகலம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று, பங்காரு அடிகளார், அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதையொட்டி, ஆலய வளாகம் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளால் அலங்கரித்து, ஆலய பிரகாரத்தில் பெருமாள், முருகன், கிருஷ்ணன் உள்பட பல்வேறு தெய்வ சிலைகளுடன் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று அதிகாலை 2 மணிமுதல் சித்தர் பீட கருவறையில் மங்கல இசையுடன் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை 9.15 மணியளவில் சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு, மேளதாளம் முழங்க பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்பளித்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

மதியம் 12 மணியளவில் பங்காரு அடிகளார், ஈர உடையுடன் கருவறை சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்தார். மேலும், கருவறையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த அகன்ற தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தாமரை, சக்கரம் முக்கோணம், அறுங்கோணம், செவ்வகம், வட்டம் ஆகிய வடிவங்களில் அமர்ந்திருந்த இளம்பெண்கள் சிறுவர், சிறுமிகள், சுமங்கலிகள் வெவ்வேறு வடிவங்களில் விளக்குகளை ஏற்றி பிரகாரத்தை வலம் வந்தனர். இதைதொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அகண்ட தீபத்தில் எண்ணெய் விட்டு வழிபட்டனர்.

மேலும், புரட்டாசி அமாவாசை முன்னிட்டு, அமாவாசை வேள்வி பூஜையையும் பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். பின்னர், லட்சார்ச்சனை மதியம் 2 மணியளவில் நடந்தது. அப்போது, 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து, அம்மனுக்கு குங்கும அர்ச்சனையும் செய்யப்பட்டது. இந்த நவராத்திரி விழா வரும் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் தேவி ரமேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்கின்றனர்.

Related Stories: