2021 சட்டசபை தேர்தலில் கூட்டணியா ? தனித்து போட்டியா ?: மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் ஆலோசனை

சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பகல் 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கொரோனா  பெருந்தொற்று காலத்திலும் உரிய  பாதுகாப்புடன் மக்கள் சேவை மற்றும்  கட்சிப் பணி ஆற்றிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரும் 2021  தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி  ஈட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி பாராளுமன்ற  தொகுதிக்கான இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சியின் உரிமைகளை தொடர்ந்து மக்களிடம் இருந்து  பறிக்கும் தமிழக அரசின் சர்வாதிகார போக்கை  கண்டிப்பது மற்றும் சிறப்பு  கிராமசபை கூட்டத்தை  விரைந்து அரசை நடத்த வைப்பதற்கான வழிவகைகள் குறித்து  ஆலோசனை நடைபெற்றது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கட்சியின் தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான  வழிவகைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் நிர்வாகிகளின் கருத்துகளை கமல்ஹாசன் கேட்டறிந்தார். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: