வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் தகவல் அம்பலம் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் லட்சக்கணக்கில் மாமூல்: பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் உத்தரவு

வேலூர்: சுற்றுச்சூழல் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை லட்சக்கணக்கில் மாமூல் கொடுத்தது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, பன்னீர்செல்வத்தை மாசுகட்டுப்பாட்டு இயக்குனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (51). இவர் வேலூர் மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக காந்தி நகர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக விருதம்பட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகிறார். இதுதவிர, ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் வீடு உள்ளது.

இவர் ஊழல் செய்வதாக கிடைத்த புகாரின்பேரில், விருதம்பட்டு, பாரதி நகர் வீடுகளில் நேற்று முன்தினம் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.3.25 கோடி, 3.6 கிலோ தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள், பல கோடி மதிப்பிலான 90-க்கு மேற்பட்ட நில ஆவண பத்திரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, டைரி உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். அந்த டைரியில், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை லட்சக்கணக்கில் மாமூல் கொடுத்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். எனினும், பன்னீர்செல்வம் மீது விஜிலென்ஸ் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் அனைத்தையும் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், பன்னீர்செல்வத்தின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் மூலம் அசையா சொத்துக்களின் மதிப்பையும் கண்டறிய முடிவு செய்துள்ளனர். இதனிடையே, நேற்றிரவு பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் உத்தரவிட்டார்.

* குடும்பத்தினரிடம் விசாரணை

சோதனை தொடர்பாக, பன்னீர்செல்வம் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘அவர் எங்களிடம் எதுவும் சொல்வதில்லை. அவரே வருவார், பணத்தை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று வைப்பார். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: