தீபாவளி நெருங்கி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பயத்தில் பல சார்பதிவாளர்கள் விடுப்பில் ஓட்டம்: பதிவுத்துறையில் பரபரப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு பயந்து சார்பதிவாளர்கள் விடுப்பில் சென்ற சம்பவம் பதிவுத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு,விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு சார்பதிவாளர்கள் சிலர் லஞ்சம் கேட்டு நெருக்கடி தருகின்றனர். அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் பத்திரப் பதிவு மூலம் வருகிறது. மேலும் தனியாக அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு போகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக, சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களிடம் கூடுதல் லஞ்சம் கேட்டு நெருக்கடி தருவதாக புகார் வந்துள்ளது.

இந்த சூழலில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு பயந்து பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒருமாதம் வரை சில சார்பதிவாளர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் என் மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர்கள் விடுப்பில் சென்று விட்டனர். ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலர்கள் கிளம்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அலுவலகமே வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

Related Stories: