திட்ட பணிகளுக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு கைவிரித்ததால் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம்: தமிழக பொதுப்பணித்துறை முடிவு

சென்னை: பல்வேறு திட்ட பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வளப்பிரிவு மூலம் பெரிய அளவிலான திட்டப்பணிகளுக்காக மத்திய அரசின் நிதியுதவியை கேட்பது வழக்கம். ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அளித்த திட்டங்களுக்கு மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒப்புதல் தராமல் கைவிரித்துவிட்டது. இதனால், ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக காவேரி வடிநிலத்தில் பாசன கட்டமைப்புகளை ரூ.3 ஆயிரம் கோடி நிதியிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் வெள்ள தடுப்பு திட்டம் ஆசிய உட்கட்மைப்பு முதலீடு வங்கி நிதி மூலமும் மேற்கொள்ளப்படுகிறது.

இதே போன்று, நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் நபார்டு வங்கியின் கடனுதவியுடன் கதவணை அமைக்கப்படுகிறது. இதற்காக அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு திட்டப்பணிகளுக்கு விரைவில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி, நபார்டு மற்றும் உலக வங்கியின் ஒப்புதல் பெற்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இப்பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: