மத்திய அரசின் 5-ம் கட்ட தளர்வுகளின்படி, பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று முதல் திறக்க அனுமதி!!

டெல்லி : மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த 5-ம் கட்ட தளர்வுகளின்படி பள்ளிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று திறக்கப்பட உள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 26ம் தேதி முதல் கட்ட ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அது முடிந்த நிலையில், அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அவர் நீட்டித்து வந்தார்.

இதுவரையில் அவர் 8 முறை ஊரடங்கை நீட்டித்து இருக்கிறார். இம்மாதம் 31ம் தேதி வரை 9ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், அடுத்தடுத்து ஊரடங்கு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, 5ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மத்திய அரசு அறிவித்துள்ள 5ம் கட்ட தளர்வுகளின் படி, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பள்ளிகள், திரையரங்குகள், மல்ட்டிபிளெக்சுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட உள்ளன. அதேநேரம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*இதனிடையே டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகளை திறப்பதில்லை என முடிவு செய்துள்ளன. அதேநேரம் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பஞ்சாப் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுபோல உத்தரபிரதேச அரசு வரும் 19-ம் தேதி திறக்க முடிவு செய்துள்ளது.

*திரையரங்குகளைப் பொருத்தவரை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத டிக்கெட்களை மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட்களை முடிந்தவரை இணைய வழியில் வழங்க வேண்டும், போதுமான டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்பட உள்ளன.

*பொழுதுபோக்கு பூங்காக்களில் அடிக்கடி மக்களால் தொடக்கூடிய பகுதிகளை கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக போதுமான பாதுகாவலர்களை பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

*நீச்சல் குளங்களை திறப்பது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒலிம்பிக்-அளவிலான நீச்சல் குளத்தில் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20 பேருக்கு பயிற்சி அளிக்கலாம். பயிற்சியாளரும் பயிற்சி பெறுவோரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: