வடமணிப்பாக்கம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவிக்கும் இருளர் குடும்பங்கள்: மெத்தன போக்கில் ஊராட்சி நிர்வாகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வடமணிப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் இருளர் குடும்பங்கள் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வடமணிப்பாக்கம் ஊராட்சி குளக்கரை பகுதியில் 20க்கும் மேற்பட்ட  இருளர் இன மக்கள் குடிசை வீடுகளை கட்டி குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல ஆண்டுகளாக, குடிநீர் வசதி செய்யவில்லை. இதனால், குடிநீருக்காக பல இடங்களுக்கு காலி குடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் மழை இல்லாததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் பெய்த மழையால், சில இடங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், வரும் பருவமழை கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. இதனால், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என கருதி, பல இடங்களில், மேற்கண்ட பகுதி மக்கள், தண்ணீர் பிடித்து செல்ல மறுக்கின்றனர். இதையொட்டி அவர்கள், தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், இப்பகுதியில் சிறு விசைப் பம்ப்புடன் கூடிய மினி டேங்க் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகள் மூலம் நிர்வாகம் செயல்படுவதால், எவ்வித நலத்திட்ட பணிகளும் நடப்பதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும், இதே ஊராட்சியில் உள்ள லட்சுமிபுரம் இருளர் பகுதியில் சிறு விசைப் பம்ப்புடன் கூடிய மினி டேங்க் உள்ளது. இந்த மினி டேங்கில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே, லட்சுமிபுரத்தில் பழுதடைந்துள்ள மின் மோட்டாரை சீரமைத்து தர வேண்டும். குளக்கரை பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு சிறு விசை பம்ப்புடன் கூடிய மினி டேங்க் அமைத்து தரவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: