நீதிபதி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு முதல்வர் ஜெகன் மோகனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: ‘நீதிமன்றங்கள், நீதிபதிகள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பதிவியில் இருந்து நீக்கி, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் கோகன் ரெட்டி சில தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். அதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நீதிபதி என்.வி.ரமணா செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘மூத்த நீதிபதியான என்.வி.ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது அதிகார வரம்பை மீறியும், நீதிமன்ற மாண்பை குலைக்கும் விதமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும், முதல்வர் என்ற செல்வாக்கை அவர் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துகிறார். குறிப்பாக, ஜெகன் மோகன் ரெட்டி மீது பண மோசடி, ஊழல், 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதால், அவர் முதல்வர் பதவியில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர். அதனால், அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ உட்பட தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: