மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் குஷ்பு கருத்து: போலீசில் புகார் செய்ய மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு

சென்னை: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, கடந்த 12ம் தேதி பாஜவில் இணைந்த குஷ்பு சுந்தர் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது, காங்கிரஸ் கட்சியை ‘மூளை வளர்ச்சி இல்லாத கட்சி’ என்று பேசியுள்ளார். ஆனால், மாற்றுத்திறனாளிகள் விரோத மற்றும் தண்டனைக்குரிய தனது கருத்திற்கு வருத்தமோ, மறுப்போ குஷ்பு இதுவரை தெரிவிக்கவில்லை. தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி தண்டனைக்குறிய குற்றமாகும். எனவே, மாநிலம் முழுவதும்  உள்ள காவல் நிலையங்களில் தமிழ்நாடு மாவட்டக் குழுக்கள் சார்பில் உடனடியாக புகார் அளிக்கவும், காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்ய வலியுறுத்தியும் சங்கத்தின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது.

* மன்னிப்பு கேட்டார் குஷ்பு

காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று நடிகை குஷ்பு பேட்டி அளித்திருந்தார். மூளை வளர்ச்சி இல்லாத என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டு இருந்ததால், மாற்றுத்திறனாளிகள் அமைப்பு குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தது. இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ள குஷ்பு, ‘ஆழ்ந்த துயரம் மற்றும் வேதனையுடன் கூடிய அவசரத்தில், 2 சொற்களை தவறாக பயன்படுத்தி விட்டேன். கடுமையான மன உளைச்சல் மற்றும் கவனக்குறைவு காரணமாக செய்ததை இனி எப்போதும் செய்ய மாட்டேன். நான் மாற்றுத்திறனாளிகளை மதிப்பவள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: