ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி பாக்கி வசூலுக்கு தடை கோரிய நடிகர் ரஜினியின் மனு வாபஸ்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாத வழக்கில் வரி விதிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ரஜினி தரப்பு வாபஸ் பெற்றது. நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி பாக்கி உள்ளது என்றும், அதை கட்டுமாறும் சென்னை மாநகராட்சி நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் ராகவேந்திரா திருமண மண்டபம் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு என்பதால் மண்டபத்தை புக்கிங் செய்தவர்களுக்கு முன்தொகை திரும்ப செலுத்த தமிழக அரசு அறிவுறுத்தியதால் ராகவேந்திரா திருமண மண்டபத்தை மார்ச் 24க்கு பிறகு புக்கிங் செய்தவர்களுக்கு முன்தொகை திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், செப்டம்பர் 10ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்துவரியில் பாதி வரியை வசூலிக்கக்கோரி சென்னை மாநகராட்சிக்கு கடந்த செப்டம்பர் 23ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென என்று ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘செப்டம்பர் 23ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடர முடியும். நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நினைவூட்டல் தர வேண்டுமே’’ என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, நினைவூட்டல் கடிதம் கொடுத்து விடுகிறோம். இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, மனு வாபஸ் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து, ரஜினி தரப்பு வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் வாபஸ் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

* இன்றைக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 சதவீதம் அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: இன்றுக்குள் சொத்துவரி செலுத்தாவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை அரையாண்டு துவங்கிய முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி உரிய காலத்தில் சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், உரிய காலத்தில் செலுத்தாதவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த 10ம் தேதி வரை சொத்து வரி செலுத்திய 5,18,286 சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட சொத்துவரியில் ரூ.4.56 கோடி ஊக்கத் தொகையாக நேர் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர்த்து, சட்டத் திருத்தத்தின்படி, அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியுடன் கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு சதவீதம் மிகாமல் தனிவட்டி விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே, சொத்து உரிமையாளர்கள், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை வருகிற 15ம் தேதிக்குள் (இன்று) செலுத்தி, தங்களது சொத்துவரியின் மீது விதிக்கப்படும் தனிவட்டியை தவிர்க்குமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: