10 ஆயிரம் சதுரஅடி வரை கட்டப்படும் குடியிருப்புகளுக்கு ஊராட்சி தலைவர்களே அனுமதி தரலாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஊராட்சிகளில் 10 ஆயிரம் சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்புகளுக்கு ஊராட்சி தலைவர்களே அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2 அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளும், அதற்கு மேல் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு டிடிசிபி மூலமும் அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சிஎம்டிஏ மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், ஊராட்சிகளில் 7 ஆயிரம் சதுர அடி கொண்ட தரைத்தளத்துடன் கூடிய 2 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு ஊராட்சி தலைவர்கள் அனுமதி வழங்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் தரைத்தளத்துடன் கூடிய 2 அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டினால் டிடிசிபியிடம் அனுமதி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக, சிறிய அளவிலான குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி கேட்டு டிடிசிபியிடம் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கிடைக்காததால் கட்டுமான பணிகளை தொடங்க முடியாமலும், பணி நிறைவு சான்றிதழ் கிடைக்காமலும் குடிநீர், மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு அனுமதியை எளிமையாக்க வேண்டும் என்று கிரெடாய் அமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையேற்று, சென்னை மாநகராட்சியை தவிர்த்து தமிழகத்தில் ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு அதாவது 10 ஆயிரம் சதுர அடி வரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என்று வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் அவர் கூறியிருப்பதாவது: ஊராட்சிகளில் 4 ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு ஊராட்சி தலைவர் அனுமதி அளிக்கலாம் என்று இருந்தது. அதன்பிறகு 7 ஆயிரம் சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, 10 ஆயிரம் சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம். வணிக ரீதியாக கட்டப்படும் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டிடங்களுக்கு என்ற நடைமுறை தொடர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: