இளையான்குடி அருகே வருடக்கணக்கில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடை: போதிய வசதியும் இல்லையென புகார்

இளையான்குடி: இளையான்குடி அருகே பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இளையான்குடி அருகே அரியாண்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு குடியிருப்பு, மேல குடியிருப்பு, நடு குடியிருப்பு, சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கு–்ம மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இங்குள்ள ரேஷன் கடையில் அரிசி, மண்ணெண்ணெய், சீனி,கோதுமை உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரேஷன் கடை கடந்த 40 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் மாத வாடகையில் செயல்பட்டு வருகிறது. ஆஸ்பெட்டாஸ் அட்டை வேயப்பட்ட இக்கட்டிடத்தில் போதிய வசதி இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் வெயிலிலும், மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.

ரேஷன் கடைக்கு போதிய வசதிகளுடன் சொந்த கட்டிடம் தர பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அரியாண்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு கூறுகையில், ‘இங்குள்ள ரேஷன் கடை பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஊரின் மையப்பகுதியில் தாராளமாக இடவசதி இருந்தும் ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அரியாண்டிபுரத்திற்கு புதிய ரேஷன் கடை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: