நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி கீழ தெருவில் 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

* தொற்றுநோய் பரவும் அபாயம்

* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகை: நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி கீழதெருவில் கடந்த 3 மாத காலமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவு நீரால்  தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நாகை நகராட்சி வார்டு 12க்கு உட்பட்டது. வடக்கு பால்பண்ணைச்சேரி கீழதெரு. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கூலித்தொழில் செய்து தங்களது பிழைப்பை நடத்தி வரும் இந்த பகுதியில் பாதாள  சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவு நீர் தினந்தோறும் வெள்ளம் போல் பொங்கி அப்பகுதியில் வழிந்தேடுகிறது.  வழிந்தோடிய கழிவு நீர் போக எஞ்சிய கழிவு நீர் அங்கேயே தேங்கி விடுகிறது. இவ்வாறு கடந்த 3 மாத காலமாக அப்பகுதியில்  பாதாளசாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விடுவதால்  அப்பகுதியில் வசிப்பவர்கள் தூங்க முடியாமல் துன்பம் அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் அந்த பகுதியில்  செல்லவே முடியாத அளவிற்கு துற்நாற்றம் வீசுகிறது. நகர எல்லையில் இப்படி ஒரு அவலத்தில் வடக்கு பால்பண்ணைச்சேரி  கீழதெருவை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி தெருவாசிகள் கூறியதாவது: நாகூர் சம்பா தோட்டத்தில் தொடங்கி வட்டார போக்குவரத்து  அலுவலகத்தை சென்றடையும் வகையில் வடக்குபால்பண்ணைச்சேரி சாலை உள்ளது. இதில் கீழதெருவில் மட்டும் 240க்கும்  மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. அப்படி பார்த்தால் 800க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  கீழதெருவுடன் பாதாள சாக்கடை இணைப்பு நிறைவுபெற்றுள்ளது. இதனால் நகரின் எந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டாலும்  கீழதெருவில் உள்ள மேன்ஹேலில் இருந்து கழிவு நீர் வெள்ளம் போல் பொங்கி பெருக்கெடுத்து ஓடதொடங்கி விடும். இது நேற்று,  இன்று நடக்கவில்லை கடந்த 3 மாத காலமாகவே நீடித்து வருகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு  பல விதமான தொற்றுநோய் பரவிவருகிறது. நகராட்சியிடம் பல முறை நேரில் சென்றும், கடிதம், வாட்ஸ்ஆப் வாயிலாகவும்  புகார்கள் தெரிவித்தும் பயன் இல்லை. இனிவரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: