18 திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான 2வது நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்க மறுப்பு: உரிமைக்குழு கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது

சென்னை: பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது. தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கடந்த 2017ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றனர். இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவை உரிமை குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரவை உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை குழு தி.மு.க எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கடந்த மாதம் 24ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கில் பேரவை தலைவர், பேரவை செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் தர வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரவைச்செயலாளர், உரிமைக்குழு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சிறப்பு வழக்குகளுக்கான அரசு வக்கீல் சோமயாஜி ஆகியோர் ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினர். இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இந்த வழக்கில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் 4 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: