மூச்சுத்திணறல், நெஞ்சுவலியால் அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சேலம் மாவட்டம் எடப்பாடி, சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) தனது காரில் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் பாதி வழியில், அவருக்கு நேற்று காலை 10.45 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்தது. இதையடுத்து அவர் முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, டீன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் 12.50 மணிக்கு மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் 4 டாக்டர்கள் கொண்ட குழுவினரோடு ஆக்ஸிஜன் செலுத்தியவாறே அழைத்து வந்தனர். சென்னையில் உள்ள டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி கூறுகையில், அமைச்சர் மருத்துவமனைக்கு வரும்போது அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். மேலும் சிகிச்சை தொடர வேண்டி இருப்பதால் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனைக்கு வரும்போது நாடி துடிப்பு 82 என இருந்தது. தற்போது 96ஆக உயர்ந்தது. நாடி துடிப்பு சீராக உள்ளது என்றார்.

Related Stories: