கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதில் முறைகேடு ஒரே பணிக்கு 2 துறைகள் சார்பில் ரூ.17.90 கோடி ஒதுக்கிய அவலம்: போட்டா போட்டியில் பணியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஒரே பணிக்கு இரண்டு துறைகள் நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி, மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வெள்ள தடுப்பு பொருட்கள் வைப்பது, கரைகளில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்த கரைகளை சீரமைப்பது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முட்செடிகள், ஆகாயத்தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக கடந்த ஜூலை மாதத்தில் ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில், கால்வாய் தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

இதில், சென்னை மாநகருக்குள் செல்லும் தெற்கு மற்றும் வடக்கு பக்கிங்காம் கால்வாய், கூவம் இணைப்பு கால்வாய் உள்ளிட்ட ஒரு சில கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூர்வார ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது.  ஏற்கனவே, பொதுப்பணித்துறை சார்பில் கால்வாய்களில் வேலை தொடங்கிய நிலையில், திடீரென மாநகராட்சி நிர்வாகமும் அதே கால்வாயில் வேலை செய்தது. இதனால், பொதுப்பணித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் கால்வாய் தூர்வாரும் பணியை நிறுத்தின. இந்நிலையில், மாநகராட்சியும் பணியை நிறுத்தியது.

இந்த நிலையில், மாநகர பகுதிகளுக்குள் கால்வாய்களில் குப்பை, ஆகயத்தாமரையை யார் அகற்றுவது என்ற போட்டி காரணமாக, சென்னை மாநகரில் உள்ள கால்வாய்களை தூர்வாரப்படாமல் அப்படியே போட்டு விட்டனர். குறிப்பாக, சென்னை மாநகர பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை அறைகுறையாக செய்து விட்டு அப்படியே நிறுத்தி விட்டனர். இதனால், பருவ மழை காலத்தில் கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர பகுதிகளுக்குள் கால்வாய் களில் குப்பை, ஆகயத்தாமரையை யார் அகற்றுவது என்ற போட்டிகாரணமாக, கால்வாய்களை தூர்வாரப்படாமல் பணிகளை அப்படியே போட்டு விட்டனர்.

Related Stories: