மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பருத்திகொள்ளை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன், இப்பகுதியில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு, டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராமம் முழுவதும் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கிராமமே இருளில் மூழ்கியது. இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் மற்றும் சமூக விரோதிகளின் தொல்லையால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று இரவு உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் திரண்டனர். அங்கு, மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: