சேலத்தில் பரபரப்பு சம்பவம் உயிரோடு முதியவரை பிரீசர் பாக்சில் விடிய விடிய வைத்திருந்த சகோதரர்: ஆன்மா பிரிய காத்திருந்ததாக அதிர்ச்சி தகவல்

சேலம்: சேலத்தில் உயிரோடு முதியவரை பிரீசர் பாக்சில் விடிய விடிய வைத்து, ஆன்மா பிரிய காத்திருந்ததாக சகோதரர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (70). இவர், தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் (74), தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ (50), கீதா (48) ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சரவணன், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பிரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து, தனது அண்ணன் இறந்துவிட்டார், சடலத்தை வைக்க பிரீசர் பாக்ஸ் அனுப்புங்கள் எனக் கேட்டுள்ளார்.

அதன்படி இரவு 7 மணியளவில் அவர்கள் பிரீசர் பாக்சை கொண்டு சென்றுள்ளனர். இறந்தவர் உடல் எங்கே என கேட்டபோது, தனியார் மருத்துவமனையில் இருந்து வருகிறது, நீங்கள் பிரீசர் பாக்சை இறக்கி விட்டு செல்லுங்கள், நாளை பிற்பகலில் வந்து எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறி சரவணன் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் வந்தபோது, பிரீசர் பாக்சில் முதியவர் ஒருவர் உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்க முயன்றபோது, வெளியே எடுக்கக்கூடாது என சரவணனும், ஜெயஸ்ரீயும் தடுத்துள்ளனர்.

இதுபற்றி திமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வக்கீல் தெய்வலிங்கத்திற்கும், சூரமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரிடம்,, தனது அண்ணன் இறந்துவிட்டார். அவரது ஆன்மா பிரிய வேண்டும். அதற்காகத்தான், பிரீசர் பாக்சில் வைத்துள்ளோம் என சரவணன் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து பிரீசர் பாக்கில் உயிருக்கு போராடிய முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை மீட்டனர். பீரீசரில், முதியவர் உடல் துடிப்பதை  பார்த்து ஆன்மா பிரிகிறது என சரவணனும், ஜெயஸ்ரீயும் கருதியுள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களாக இருந்ததால், இத்தகைய சம்பவம் நடந்துள்ளது என அக்கம் பக்கத்தினரும் தெரிவித்தனர்.

Related Stories: