அரசு நிகழ்ச்சியில் புறக்கணிப்பு அதிகாரிகளிடம் திமுக எம்எல்ஏ வாக்குவாதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ  அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 12 நடமாடும் நியாய விலைக் கடையை அமைக்க திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏவான வக்கீல் எழிலரசன் அழைக்கப்படவில்லை. இதனை அறிந்த திமுக எம்எல்ஏ கூட்டுறவு பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரை அழைக்காமல் யார் துவங்க சொன்னது என்று கேட்டார். மேலும், தமிழக அரசின் முதலமைச்சர் திமுக எம்எல்ஏ, எம்பிக்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரா.. இல்லை மாவட்டத்தின் அமைச்சர் சொன்னாரா.. சொல்லுங்கள், இதை நீங்கள் தெரிவித்து விட்டால் உங்களை நான் எந்த தொந்தரவும் செய்யாமல் நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இணை பதிவாளர் மணி தவறுக்கு வருத்தம் தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்து நடமாடும் நியாய விலை கடை துவக்க ஏற்பாடு செய்தார்.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நகரில் 37 வது வட்டத்தில் உள்ள வேலாத்தம்மன் கோவில் தெருவில் நகரும் நியாய விலைக் கடை, கீழம்பி, மேல்கதிர்பூர் உள்ளிட்ட 7 இடங்களில்  நகரும் நியாயவிலைக் கடைகளை திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தொடங்கி வைத்தார். உடன் நகர திமுக சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், மாவட்ட பிரதிநிதி சுகுமார், நகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர் கருணாநிதி, பொருளாளர் வெங்கடேசன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: