பார்சல்கள் கையாள்வதில் முறைகேடு நடந்ததாக புகார் விமான நிலைய கார்கோ பிரிவில் சிபிஐ நள்ளிரவில் சோதனை

சென்னை: சென்னை விமான நிலைய கார்கோ பிரிவு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினர். இது, திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமானநிலைய வளாகத்தில் பழைய விமானநிலைய பகுதியில் இன்டர்நேஷனல் கார்கோ பிரிவு உள்ளது. வெளிநாடுகளுக்கு விமானங்களில் அனுப்புகிற சரக்கு பார்சல்கள், கன்டெய்னர்கள், அதேபோல் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வருகிற பார்சல்கள், கன்டெய்னர்கள் இங்கு கையாளப்படுகின்றன. இந்த கார்கோ பிரிவு 24 மணி நேரமும் இயங்கும். இந்த கார்கோ பிரிவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்.

அவர்கள் கார்கோ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பகுதிகளில் நேற்று அதிகாலை 4.30 மணி வரை சோதனை நடத்தியதோடு, அங்கு பணியிலிருந்த கார்கோ அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதாகவும், அதோடு முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை எதற்காக நடந்தது என்பதுபற்றி அதிகாரிகள் தரப்பில் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால், சமீபகாலமாக சென்னை விமானநிலைய சரக்கக பகுதியில் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. அதேபோல், சரக்கு விமானங்களில் அனுப்பப்படும் பார்சல், கன்டெய்னர்களிலும் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக தகவல் வந்தன. இதையொட்டியே சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: